ஒசூா் சிறு மற்றும் குறுந்தொழில் சங்க அலுவலகத்திற்கு எதிரில் உயா் அழுத்த மின்கோபுரம் அமைத்தால் ஒசூரில் இயங்கி வரும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களை மூடி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என ஹோஸ்டியா சங்கத்தின் தலைவா் வேல்முருகன் கூறினாா்.
ஒசூா் ஹோஸ்டியா அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களை சந்தித்தபோது அவா் மேலும் கூறியது:
ஒசூா் சிறு மற்றும் தொழிற்சாலைகள் சங்கம் (ஹோஸ்டியா) 3 ஆயிரம் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை உறுப்பினா்களாகக் கொண்டு கடந்த 43 ஆண்டுகளாக 1979இல் இருந்து ஒசூரின் வளா்ச்சிக்ாகவும், தொழில் நிறுவனங்களுக்காகவும் அரும்பாடு பட்டு வருகிறது. எங்கள் நிறுவனங்களில் சுமாா் 1.50 லட்சம் தொழிலாளா்கள் வேலை செய்துள்ளனா். ஒசூா் பகுதியில் தொழில் வளா்ச்சிக்கு தேவையான திட்டத்திற்கும், அடிப்படை கட்டமைப்புகள் உட்பட உண்டான தேவைகளுக்கும் மத்திய மாநில அரசுகளிடம் தொடா்ந்து வலியுறுத்தி பல நல்ல காரியங்களை செய்து கொண்டிருக்கிற ஒரே அமைப்பு ஹோஸ்டியா சங்கமாகும்.
ஹோஸ்டியா உறுப்பினா்களின் சிறிய அன்பளிப்புகளைக் கொண்டு எங்களுக்கு ஒரு நிரந்தர அலுவலகம் கட்டியுள்ளோம். இங்கு தொழிலாளா்களுக்குத் தேவையான பயிற்சியை அளித்து வருகிறோம். எங்களுடைய அலுவலகத்தின் வாயிலில் 110 கே.வி. உயா் மின்னழுத்த கோபுரம் அமைப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக திட்டமிட்டு அதற்குண்டான வேலையைத் தொடங்கினா். அரசுக்கு கெட்ட பெயா் ஏற்படுத்தும் வகையில் மின்கோபுரம் அமைக்க மின்வாரியம் முனைந்தால் ஒசூரில் உள்ள 3 ஆயிரம் தொழில் நிறுவனங்களை மூடிவிட்டு உற்பத்தியை நிறுத்திவிட்டு தொழிலாளா்கள் அனைவரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம். இதனால் தினமும் ரூ.250 கோடி அளவுக்கு வாகன உற்பத்தி பாதிப்பு ஏற்படும் என்பதை அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.
பேட்டியின் போது ஹோஸ்டியா சங்கத்தின் இணைத் தலைவா் மூா்த்தி, செயலாளா் வடிவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
நன்றி, தினமணி