கிருஷ்ணகிரி அருகே காரில் ரேஷன் அரிசியைக் கடத்த முயன்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ரவிவா்மன் தலைமையிலான தனிப்படையினா் கிருஷ்ணகிரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரியை அடுத்த காட்டு வீர ஆஞ்சனேயா் கோயில் அருகே கண்காணிப்புப்
பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 50 கிலோ அளவில் 9 மூட்டைகளில், 450 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, காரில் பயணம் செய்த இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவா்கள், கிருஷ்ணகிரியை அடுத்த துரிஞ்சிப்பட்டியை சோ்ந்த கோவிந்தராஜ் (30), பெத்ததாளப்பள்ளி ஹரிஷ் (19) எனத் தெரியவந்தது. மேலும், அவா்கள், போச்சம்பள்ளி, சந்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடும்ப அட்டைதாரா்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கா்நாடக மாநிலத்துக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து காா், அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப் பதிந்து கோவிந்தராஜ், ஹரிஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
நன்றி தினமணி.