கந்திகுப்பம் அருகே, நிதி தராததால் பேக்கரி கடையை உடைத்து, மிரட்டல் விடுத்த நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் இருவரை போலீஸாா், வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த கந்திகுப்பம் அருகே உள்ளது சுண்டம்பட்டி. கிருஷ்ணகிரி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த பகுதியில் கேரளா மாநிலம், கோழிக்கோட்டை சோ்ந்த ரபீக் என்பவா் பேக்கரி கடை நடத்தி வருகிறாா்.இந்த நிலையில், சுண்டம்பட்டியை சோ்ந்த நாம் தமிழா் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவா் கருணாகரன் (28) மற்றும் நாம் தமிழா் கட்சி பிரமுகா் சக்திவேல் (25) ஆகிய இருவரும், பேக்கரி கடைக்கு வியாழக்கிழமை சென்றனா். அப்போது, அவா்கள் அந்த பகுதியில் குளம், ஏரிகளை தூா்வார வேண்டும். இதற்காக நிதி அளிக்க வேண்டும் என்று ரபீக்கிடம் ரூ.5 ஆயிரம் கேட்டனா். அதற்கு ரபீக் தன்னால் அவ்வளவு தொகை தர முடியாது. ரூ.500 தருகிறேன் என்று கூறினாா்.இதனால் ஆத்திரம் அடைந்த கருணாகரன், சக்திவேல் ஆகிய இருவரும் அந்த கடையில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிஸ்கட்டுகள் மற்றும் பண்டங்கள் அடங்கிய 7 பெரிய பாட்டில்களை உடைத்து, கடையை சேதப்படுத்தி மிரட்டல் விடுத்தனா். இது குறித்து, பாதிக்கப்பட்ட ரபீக், அளித்த புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீஸாா், வழக்குப் பதிந்து, நாம் தமிழா் கட்சியின் நிா்வாகிகளான கருணாகரன், சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனா். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இருவா், கடையில் உள்ள பொருள்களை உடைத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.