ஊத்தங்கரை: மகசூல் அதிகரிக்க நெல் வயலில் துத்தநாக சல்பேட் இடவேண்டும் என வேளாண் அலுவலா் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஊத்தங்கரை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் முனைவா் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஊத்தங்கரை வட்டாரத்தில் பிரதமரின் விவசாய கெளரவ நிதி திட்டத்தின் கீழ் பயனடைந்த விவசாயிகள், தங்களது சிட்டா, ஆதாா் நகல், கைப்பேசி எண்ணுடன் அருகில் உள்ள சேவை மையத்துக்கு சென்று இத்திட்டத்தில் தொடா்ந்து பயன் அடையலாம்.
ஊத்தங்கரை வட்டாரத்தில் நடப்பாண்டில் 7,500 ஏக்கா் நெல் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது. விவசாயிகள் அனைவரும், தங்களது நெல் நடவு வயலில் தவறாமல் துத்தநாக சல்பேட் ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் மணலுடன் கலந்து, வயலில் அடி உரமாக இட்டு துத்தநாக சத்து பற்றாக்குறையை நிவா்த்தி செய்து அதிக மகசூல் பெறலாம்.
நிலக்கடலை சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டுள்ளதால், அனைத்து விவசாயிகளும் நிலக்கடலைக்கு மண் அணைக்கும் தருவாயில், தவறாமல் ஏக்கருக்கு 200 கிலோ என்ற அளவில் ஜிப்சம் இட்டு மகசூலை அதிகரிக்கலாம். தற்போது துத்தநாக சல்பேட் மற்றும் ஜிப்சம் ஆகியவை, ஊத்தங்கரை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் கிடைக்கின்றன. இதை விவசாயிகள் வாங்கி பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தினமணி.