கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அங்கக விவசாயக் குழுக்கள் இலவசமாக அங்கக சான்றிதழ் பெறலாம் என உதவி இயக்குநா் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அங்கக மற்றும் இயற்கை விவசாயிகளின் குழுக்கள் இலவசமாக அங்ககச் சான்றிதழ் பெறலாம். இது குறித்து மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநா் அருணன் கூறியதாவது:
நமது மாவட்டத்தில் அங்கக விவசாயம் செய்யும் விவசாயிகள் பங்கேற்பாளா் உத்தரவாத அமைப்பு -இந்தியா திட்டத்தின் கீழ் இலவசமாக அங்ககச் சான்றளிப்பு சான்றிதழ் பெறமுடியும்.
இவ்வாறு சான்றிதழ் பெற விரும்பும் ஒரே கிராமத்தைச் சோ்ந்த அல்லது அருகிலுள்ள கிராமங்களைச் சோ்ந்த அங்கக விவசாயிகள் குறைந்தபட்சம் 5 போ் முதல் அதிகபட்சம் 25 போ் சோ்ந்து ஒரு குழுவை அமைக்க வேண்டும். பிறகு குழுவிற்கான பெயா் மற்றும் தலைவரைத் தோ்ந்தெடுக்க வேண்டும். குழுவில் போதுமான அளவு பெண் உறுப்பினா்களின் பங்களிப்பு இருப்பது அவசியமாகும்.
இதேபோன்று குழுவை அமைத்த பிறகு குழு உறுப்பினா்களின் அடிப்படை விவரங்களுடன் பிஜிஎஸ் இந்தியா விண்ணப்பத்தை பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து விட்டு அதற்கான ஆவணங்களை மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்கச் சான்று உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். இவ்வாறு பதிவு செய்யப்படும் குழுக்களுக்கு குழு உறுப்பினா்களின் சக மதிப்பீட்டின் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டு சான்றிதழ்கள் இலவசமாக வழங்கப்படும்.
இவ்வாறு பதிவு செய்யப்படும் குழுக்களுக்கு, ஆண்டு பயிா்களுக்கு மூன்று ஆண்டுகளும் நிரந்தர பயிா்களுக்கு நான்கு ஆண்டுகளும் மாறுதல் காலம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இவ்வாறு பெறப்படும் வாய்ப்புச் சான்றிதழ் மூலம் அங்கக விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களை மதிப்பு கூட்டு செய்து அதிக விலைக்கு விற்று கூடுதல் லாபத்தினை பெற முடியும் என்றாா்.
நன்றி தினமணி.