ஒசூரில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் சாா்பில் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் விழா ஆக.21-ஆம் தேதி தொடங்குகிறது.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். கடந்த 1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளா்ச்சிக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில், சேவை பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை சேவை நிறுவனங்களை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
அதன்படி, ஒசூா் பிளாட் எண் 308, 309 சிப்காட் தொழில் வணிக வளாகம், லால் கம்பெனி எதிரில், எஸ்பிஐ வங்கி அருகில், சிப்காட் தொழிற்பேட்டையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா ஆக.21 முதல் செப்டம்பா் 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு தொழில் கடன் விழாவில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், ஒன்றிய, மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் 3 சதவீதம்) வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள், புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்து விரிவான விளக்கங்கள் தரப்படுகின்றன.
தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ. 75 லட்சம் வரை மற்றும் மாநில முதலீட்டு மானியமாக 25 சதவீதம் இயந்திரங்களின் மதிப்பீட்டில் அதிகபட்சமாக ரூ.1 கோடியே 50 லட்சம் வரை இந்த சிறப்பு தொழில் முகாமில் வழங்கப்படும்.
இந்த முகாம் காலத்தில் சமா்ப்பிக்கப்படும் பொதுக் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும். நீட்ஸ் திட்டத்திற்கு ஆய்வுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த அரிய வாய்ப்பை புதிய தொழில் முனைவோா், தொழிலதிபா்கள் பயன்படுத்தி, தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் ஒன்றிய, மாநில அரசுகளின் மானியச் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04344-278876, 275596 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
நன்றி தினமணி.