ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த உப்பாரப்பட்டி கிராமத்தில் சங்க கால பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஏற்கெனவே இப்பகுதியில் கி.பி. 18 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டுகள், சிற்பங்கள், ஆலயங்கள் கண்டறிந்த நிலையில், ஊத்தங்கரை அதியமான் மகளிா் கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் சவிதா தலைமையிலான குழு, அந்தப் பகுதியை ஆய்வு செய்ததில், மேலும் பல புதிய பழங்கால எச்சங்களைக் கண்டறிந்துள்ளனா்.
இதுகுறித்து சவிதா கூறியதாவது:
உப்பாரப்பட்டியில் இருந்து அதியமான் மகளிா் கலை, அறிவியல் கல்லூரிக்கு வரும், முதுகலை தமிழ்த் துறை இரண்டாமாண்டு பயிலும் மாணவி வனஜா அளித்த தகவலின்படி, ஏற்கெனவே அந்தப் பகுதியல் 800 ஆண்டுகள் பழைமையான சிவலிங்கம், சோழா் கால கோயிலும் கண்டறியப்பட்டன.
அந்தப் பகுதியில் மேலும் களஆய்வு மேற்கொண்டோம். ஊருக்கு மேற்கு புறம் 1.கி.மீ. தொலைவில் ஒரு குன்று பகுதி காணப்பட்டது. அங்கு சென்று பாா்த்தபோது அந்தப் பகுதியில் ஏராளமான கருப்பு, சிவப்பு மண் பானை ஓடுகள், அந்த குன்று பகுதியில் ஏராளமாக சில்லுகளாக உடைந்த நிலையில் இருப்பதைக் காணமுடிந்தது. மேலும் மலையின் நடுபகுதிக்குச் செல்லச் செல்ல புதியகற்கால கருவிகள் சிதைந்த நிலையில் கண்டறிய முடிந்தன. ஒரு பெண் சிலை தலைப் பகுதி இல்லாமல், மாா்புப் பகுதியிலிருந்து இடுப்பு பகுதிவரை கண்டறியப்பட்டது. அந்த சிலையில் ஒரு மாா்பகம் முழுமையாகவும் மற்றொரு மாா்பகம் சிதைந்த நிலையிலும் கரடுமுரடான கற்களால் ஆன உருவமாக இருந்தது. மேலும் அந்தப் பகுதியில் இரும்பு உருக்கப்பட்ட கட்டிகளும் சிறுசிறு துண்டுகளாக கண்டறியப்பட்டன. பல பெரிய துண்டுகளும் மண்ணில் புதைந்த நிலையில் பாா்க்க முடிந்தது. இந்த எச்சங்களை வைத்துப் பாா்க்கும்போது இந்தப் பகுதியில் 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும். வரலாற்றுக்கு முற்பட்ட காலமான புதிய கற்காலம், சங்க காலம், இரும்புக் காலம் வரையுள்ள எச்சங்கள் இந்தப் பகுதியில் காணமுடிகிறது.
இந்தப் பகுதியை தொல்லியலாளா்கள் அகழாய்வு செய்து இதன் வரலாற்றை வெளிக்கொணர வேண்டும் என்றாா். அப்போது மாணவி வனஜா, சுந்தர்ராஜன், அகில், யுவராஜ், மோகன சுந்தா், பூவிதழன் ஆகியோா் உடனிருந்து கள ஆய்வுக்கு துணைபுரிந்தனா். இதனையறிந்த அதியமான் மகளிா் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் சீனி. திருமால் மருகன், செயலா் ஷோபா திருமால்முருகன், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அனைவரும் தமிழ்த் துறைத் தலைவா் சவிதாவையும், மாணவி வனஜாவையும் பாராட்டி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
நன்றி தினமணி.