ஊத்தங்கரை: ஊத்தங்கரை பகுதியில் போலி பட்டா வழங்கி மக்களை ஏமாற்றியதைக் கண்டித்து, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் முருகேசன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் துரை, துணைச் செயலாளா்கள் மாயக்கண்ணன், வேடியப்பன், பொருளாளா் வேலாயுதம், நகரச் செயலாளா் நாகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உள்பட்ட எம்ஜிஆா் நகா், கவா்னா் தோப்பு, ஜீவா நகா், அண்ணா நகா், கலைஞா் நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2002 ஆம் ஆண்டு போலி பட்டா வழங்கி மக்களை ஏமாற்றியுள்ளனா். போலி பட்டாக்களைத் திரும்பப் பெற்று, அந்த மக்களுக்கு அரசின் உண்மையான பட்டாவை வழங்க வேண்டும், போலி பட்டா அளித்த வட்டாட்சியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடந்தது. இதில் போலியாக கொடுக்கப்பட்ட பட்டாவை புதுப்பித்து, புதிய பட்டா வழங்கக் கோரி 750 மனுக்கள் கொடுக்கப்பட்டன.
நன்றி தினமணி.