கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் அமைப்பாளர் சக்தி தலைமையில், பாஞ்சாலியூர் கிராம பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பாஞ்சாலியூர் கிராமத்தில் 130 வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் அனைத்தும் கடந்த 20 வருடங்களாக அரசு வழங்கிய புறம்போக்கு இடத்தில் கட்டி வாழ்ந்து வருகிறோம். ஆனால் இதுநாள் வரை எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் இருந்து வருகிறது. மேலும் ஓலை குடிசைகளுக்கு மின்சாரம் வழங்கி வந்த நிலையில், தற்போது நாங்கள் சிமெண்ட் சீட் போட்டதால், எங்களுக்கு மின்சாரம் வழங்க இயலாது என்றும், நீங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா இருந்தால் தான் மின் இணைப்பு வழங்க முடியும் என்று மின்வாரியத்தில் கூறிவிட்டார்கள். தற்போது நாங்கள் வீடு இருந்தும், எங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். எனவே, எங்கள் அனைத்து குடும்பங்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.