கிருஷ்ணகிரியில் 56 விவசாயிகளுக்கு ரூ.42.74 லட்சம் மதிப்பிலான பவர் டில்லர்கள் மானியத்தில் வழங்கப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, சென்னை தலைமை செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், சிறிய வகை வேளாண் இயந்திரங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள், விசை களையெடுப்பான்கள் உள்ளிட்ட கருவிகள் வழங்கும் பணியினை துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பாக ரூ.42 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான பவர் டில்லர்களை 56 விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கும் பணியினை கலெக்டர் சரயு, சட்டமன்ற உறுப்பினர்கள் பர்கூர் மதியழகன், தளி ராமச்சந்திரன் ஆகியோர் விவசாயிகளுக்கு வழங்கினர்.
இது குறித்து கலெக்டர் கூறுகையில், தமிழக அரசு வேளாண் பெருமக்களின் வருவாயினை பன்மடங்காக உயர்த்திட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், முதலமைச்சரின் மானாவரி நில மேம்பாட்டு இயக்கம், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம், விவசாயிகளுக்கு 1.50 லட்சம் கூடுதல் இலவச விவசாய மின் இணைப்புகள், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களின் மண்வளத்தினை அறிந்திட தமிழ் மண் வளம் இணையதளம், வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம், வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டம், பயிர் பாதுகாப்பு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், விவசாய பெருமக்களுக்கு வேளாண் கருவிகள், சொட்டுநீர் பாசனம், உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் மானிய விலையிலும், மா, தென்னங்கன்று, மாடித்தோட்ட செடிகள், விதைகள் மற்றும் உபகரணங்கள் இலவசமாகவும் வழங்கி வருகிறது.
அதன்படி, தமிழக முதல்வர், குறைந்த அளவு பரப்பில் வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளின் சிறிய வகை வேளாண் இயந்திரங்களைக் கொண்டு உழவுப்பணிகள் மற்றும் இதர வேளாண் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள், விசை களையெடுப்பான் உள்ளிட்ட கருவிகளை இன்று வழங்கியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டிற்கு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரமயமாக்கல் 2023&24 திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான பவர் டில்லர்களை 56 விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 6 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்திலும், பழங்குடியினர் வகுப்பு விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சீனிவாசன், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர்கள் ரவி, இந்துமதி, லட்சுமி ஐஸ்வர்யா, அனுசாபேகம், வேளாண் அலுவலர்கள் சீனிவாசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கதிரவன் மற்றும் கிருபாகரன், அஸ்லாம், மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.