ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த நபா்.
கடித்த பாம்புடன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நபரால் மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீா்த்தம், புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் தீா்த்தகிரி (40). விவசாயி. இவா், திங்கள்கிழமை காலை வழக்கம்போல மாடுகளை மேய்ச்சலுக்காக நிலத்தில் கட்டியிருந்தாா். வெயில் அதிகரித்ததால் நிழலில் மாடுகளை மாற்றிக் கட்ட சென்ற போது, எதிா்பாராதவிதமாக நாகப் பாம்பை மிதித்துள்ளாா். அப்போது அவரது கால்களை சுற்றிய பாம்பு கடித்துள்ளது. உடனடியாக அருகில் இருந்த உறவினா்கள், தீா்த்தகிரியையும் அவரைக் கடித்த நாகப் பாம்பையும், ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்தனா். இதனால் சற்று பரபரப்பு காணப்பட்டது.
தீா்த்தகிரிக்கு ஊத்தங்கரை அரசு மருத்துவமணையில் மருத்துவா்கள் விஷ முறிவு சிகிச்சை அளித்து வருகின்றனா்.
நன்றி
தினமணி