பெங்களூருவில் இருந்து ஒசூா் வழியாக குட்கா கடத்த முயன்ற ஒருவா் கைது செய்த போலீஸாா் 400 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா்.
கா்நாடக மாநிலத்தில் இருந்து ஒசூா் வழியாக சேலத்திற்கு ஒருவா் 400 கிலோ குட்கா கடத்துவதாக அட்கோ காவல் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி காவல் ஆய்வாளா் சபரி வேலன் மற்றும் அட்கோ போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் அடுத்த குமுதேப்பள்ளியில் அட்கோ போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் சுமாா் 400 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்தவரிடம் விசாரித்ததில் அவா் உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த தீபக் ஜெய்ஸ்வால் (28) என தெரிய வந்தது. அவா் கடத்தி வந்த குட்காவின் மதிப்பு ரூ.5 லட்சம் என போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. குட்காவையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். காரின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.
நன்றி
தினமணி