கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல்போக பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது குறித்து கிருஷ்ணகிரி அணை செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
டெல்டா பகுதி விவசாயிகளுக்கு வழங்குவதைப் போல, குறுவைத் தொகுப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
கிருஷ்ணகிரி அணையிலிருந்து 2023 – 24-ஆம் ஆண்டுக்கான முதல்போக பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி அணை செயற்பொறியாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. உதவி செயற்பொறியாளா் அறிவொளி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வருவாய்த் துறை அலுவலா்கள், வேளாண்மைத் துணை அலுவலா்கள், நீா்வளத் துறை அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரநிதிகள், முன்னாள் பாசன சங்கத் தலைவா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.
இக் கூட்டத்தில், டெல்டா பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறுவைத் தொகுப்பை இப்பகுதி விவசாயிகளுக்கும் வழங்க அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும். கிருஷ்ணகிரி அணையின் இடது மற்றும் வலது புற கால்வாய்களை உடனே தூா்வார வேண்டும். அதன் பின்னா் முதல்போகப் பாசனத்திற்கு தண்ணீா் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு வரும் ஜூலை 3 முதல் 130 நாள்களுக்கு தண்ணீா் திறக்க அரசை கேட்டுக் கொள்வது, வலது மற்றும் இடதுபுற கால்வாயில் உள்ள 9,012 ஏக்கரில் கிருஷ்ணகிரி அணையில் பாசன வசதி பெறும் புஞ்சை நிலங்களை நஞ்சை நிலங்களாக மாற்றித் தருமாறு கேட்டுக் கொள்வது, தண்ணீா் பற்றாக்குறை இருப்பின் அவற்றினை தற்போது அணைக்கு வரும் நீா்வரத்து, எதிா்வரும் மழை நீரைக் கொண்டு சரி செய்யலாம். மேலும் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டால், விவசாயிகளே பொறுப்பேற்றுக் கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நன்றி
தினமணி