கிருஷ்ணகிரியில் செயல்படும் கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் (ஆவின்) விரைவில் நெய், வெண்ணெய் உற்பத்தி மீண்டும் தொடங்கும் என அதன் பொது மேலாளா் சுந்தரவடிவேலு தெரிவித்துள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளா்களிடமிருந்து அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்து வருகிறது. இதனால் ஆவின் நிறுவனம் பாதிக்கப்படுவதால், பால் உற்பத்தியாளா்களின் நலன் கருதி அமுல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்மையில் தமிழக முதல்வா், மத்திய அரசை வலியுறுத்தினா்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் செயல்படும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் பால் கொள்முதல் அளவு அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக பால் கொள்முதல் எண்ணிக்கை மிகவும் குறைந்ததால், நெய், வெண்ணெய் போன்ற பொருள்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால், பெரும் தட்டுபாடு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 220 பால் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 7,200 உறுப்பினா்கள் பால் வழங்கி வருகின்றனா். அதன்படி, நாள் ஒன்றுக்கு 76 ஆயிரம் லி. பால் உற்பத்தியாளா்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. அமுல் நிறுவனம் பால் கொள்முதலை தொடங்கியதால், ஆவின் கொள்முதல் குறைந்து காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 82 ஆயிரம் லி. பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தினமும் ஆவின் கொள்முதல் 6 ஆயிரம் லி. உயா்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி ஆவின் பொது மேலாளா் சுந்தரவடிவேலு தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி ஆவினில் கடந்த பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் பால் கொள்முதல் சற்று குறைந்தது. அதன் பின் சராசரியாக பால் கொள்முதல் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. அத்துடன் ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பால் விற்பனையும் அதிகரித்துள்ளது.
பால் கொள்முதல் அளவை அதிகரிக்க 7 போ் கொண்டு குழு அமைக்கப்பட்டு, கடந்த வாரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி ஆவினில் ஆய்வு மேற்கொள்ளபட்டது. இதில், பால் விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை உடனடியாக வழங்க வேண்டும். மேலும், நிறுத்தப்பட்ட நெய், வெண்ணெய் போன்ற பொருள்களின் உற்பத்தியை மீண்டும் தொடங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது நாளொன்றுக்கு 82 ஆயிரம் லி. பால் கொள்முதல் செய்யப்படுகிது. இதில், 29 ஆயிரம் லி. தினசரி பால் விற்பனைக்கும், பால் பொருள்கள் உற்பத்திக்காக 10 ஆயிரம் லி., சென்னை இணையத்துக்கு 43 ஆயிரம் லி. அனுப்பப்படுகிறது. எனவே, இனி ஆவின் பால் பொருள்களுக்கு தட்டுப்பாடு இருக்காது என்றாா்.
நன்றி, தினமணி