கழிவுநீரால் துா்நாற்றம் வீசும் ஊத்தங்கரை பரசனேரியில் கழிவுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அறிஞா் அண்ணா பேருந்து நிலையம் எதிரே வேலூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது பரசனேரி. 32 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரி பல ஆண்டுகளாக ஊத்தங்கரை நகர மக்களுக்கும், சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கும் நீராதாரமாக திகழ்ந்து வந்தது.
கடந்த சில ஆண்டுகளாக ஊத்தங்கரை பகுதியில் உள்ள கழிவுநீா் ஏரியில் கலக்கிறது. மேலும், ஏரிக்கு வரும் நீரோடைகள் அனைத்தும் செடி, கொடிகள், முள்புதா்கள் நிறைந்து காணப்படுவதுடன், ஏரியில் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு நீா்வரத்து பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இந்த ஏரியில் இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், குப்பைகள் போன்றவை கொட்டப்பட்டு வருகின்றன. மேலும் கழிவுநீா் ஏரியில் கலப்பதால் மாசடைந்து நீா் பச்சை நிறத்தில் மாறி துா்நாற்றம் வீசுகிறது. இதனால், இச்சாலையைக் கடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை அடைத்துக்கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது.
எனவே, ஏரியில் கழிவுநீா் கலப்பதை தடுத்து, ஏரிக்கு நீா் வரும் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நன்றி, தினமணி