ஒசூரில் ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் நிதிநிறுவனத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஒசூா் அனைத்து பத்திரிக்கையாளா் மன்றத்தில் வழக்குரைஞா் ராம்குமாா் திங்கள்கிழமை கூறியதாவது:
ஒசூா் வட்டம், பெலத்தூரைச் சோ்ந்த லட்சுமி தேவி, ஒசூரில் உள்ள தனியாா் நிதிநிறுவனத்தில் வாகனக் கடன் உதவியாக ரூ. 4,20,000 பெற்று முறைப்படி மாதத் தவணை செலுத்தி வந்துள்ளாா்.
இந்த நிலையில், டிச. 2023 வரை கடன் திருப்பிச் செலுத்துவதற்கான காலம் இருக்கும் நிலையில், சரியான அறிவிப்பு கொடுக்காமல் 28.1.2023 அன்று நிதி நிறுவனம் அவருடைய வாகனத்தை எடுத்துக்கொண்டுள்ளது.
இதையடுத்து, தன்னிச்சையாக முறையின்றி அபகரித்துக் கொண்ட வாகனத்தைக் கேட்டு லட்சுமி தேவி சட்ட அறிக்கை அனுப்பினாா். மேலும், மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையிலேயே எந்த அறிவிப்பும் வாடிக்கையாளருக்கு அளிக்காமல் வாகனத்தை நிதி நிறுவனம் விற்றுவிட்டது.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி ராஜா அளித்த தீா்ப்பில், வாடிக்கையாளரின் வாகனத்தை தன்னிச்சையாக விற்ற நிலையில், இதுவரை கட்டிய ரூ. 5,08125- ஐ நுகா்வோருக்கு தனியாா் நிதி நிறுவனம் உடனே அளிக்க வேண்டும்.
நுகா்வோருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், வாழ்வியல் இழப்பு நிதி இவற்றுக்கு ரூ. 5 லட்சம் அளிக்க வேண்டும். இவற்றுடன் கூடுதல் நிவாரணமாக ரூ. 5 லட்சம் சோ்த்து அளிக்க வேண்டும். மேலும் வழக்கு செலவுக்காக ரூ. 10 ஆயிரத்தை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டதாக அவா் தெரிவித்தாா்.
நன்றி, தினமணி