கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் ரூ.186 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகள் துவங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓசூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில், பூனப்பள்ளி, மத்திகிரி ஆகிய இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக ரூ.186 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகளுக்கு மாவட்ட கலெக்டர் சரயு, ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் முன்னிலையில் பூமி பூஜை செய்து சாலை பணிகளை துவக்கி வைத்தார்.
இது குறித்து கலெக்டர் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஓசூர் மாநகராட்சி, தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களான டிவிஎஸ், டாடா எலக்ட்ரானிக்ஸ், அசோக்லேலாண்ட் உள்ளிட்ட பெரிய தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர், முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இருவழி சாலைகளை நான்கு வழி சாலைகளாக மாற்ற நிதி ஒதுக்கீடு செய்து பூமி பூஜை செய்து பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்யப்படுவதால் பெங்களூர் மற்றும் சென்னை செல்லும் ஆறு வழிப் பாதைக்கு இணைப்பு பாலமாக உள்ளது. இதனால் சரக்கு போக்குவரத்து மற்றும் நிறுவனங்களுக்கு வந்து செல்லும் பணியாளர்களுக்கும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளின் போக்குவரத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
அதன்படி, ஓசூர் இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகில், முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டம் 2022&23ன் கீழ் கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம்) சார்பில் ரூ.42 கோடி மதிப்பில் 4.850 கி.மீ., ஓசூர் உள்வட்ட சாலையில் இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல் சிஷ்யா பள்ளி வரை இருவழித்தடத்திலிருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல், மழைநீர் வடிகால் கட்டுதல், தடுப்பு சுவர் கட்டுதல், கல்வர்ட அகலப்படுத்துதல் மற்றும் தடுப்பு பணிகளுக்கும், தொடர்ந்து பூனப்பள்ளியில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டம் 2022&23ன் கீழ் ரூ.66 கோடி மதிப்பில் 8.10 கி.மீ ஓசூர் & தேன்கனிக்கோட்டை (வழி) தளி சாலையில் வேளாங்கண்ணி பள்ளி முதல் பூனப்பள்ளி மற்றும் பூனப்பள்ளி முதல் உப்பாரப்பள்ளி வரை இருவழித்தடத்திலிருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல், மழைநீர் வடிகால் கட்டுதல், தடுப்பு சுவர் கட்டுதல், கல்வர்ட் அகலப்படுத்துதல் மற்றும் தடுப்பு பணிகளும் நடைபெறவுள்ளது.
மேலும், மத்திகிரியில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டம் 2022&23ன் கீழ் ரூ.78 கோடி மதிப்பி 11.280 கி.மீ., ஓசூர் & கெலமங்கலம் சாலையில் மத்திகிரி கூட்டு ரோடு முதல் டிவிஎஸ் கம்பெனி வரை பல வழித்தடத்திலிருந்து நான்கு வழிச்சாலையாகவும், இருதாளம் முதல் குந்துமாரனப்பள்ளி வரை இருவழித்தடத்திலிருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல், மைய தடுப்புச்சுவர் கட்டுதல், மழைநீர் வடிகால் அமைத்தல், தடுப்பு சுவர் கட்டுதல், கல்வர்ட் அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள ரூ.186 கோடி மதப்பிலான பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியின் போது, ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சரவணன், ஓசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தைய்யா, தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசரெட்டி, உதவி கோட்டப் பொறியாளர் முருகன், உதவி பொறியாளர் வெங்கட்ராமன், ஓசூர் தாசில்தார் சுப்பிரமணி, முன்னாள் எம்எல்ஏ., முருகன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.