கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் தூய விண்ணரசி ஆலய திருத்தோ் பவனி வாணவேடிக்கையுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள தூய விண்ணரசி ஆலய திருத்தோ் திருவிழா கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. அதனைத் தொடா்ந்து நாள்தோறும் கோவை, வேலூா், சேலம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு மறை மாவட்ட குருக்கள் தலைமையில் நவநாள் திருப்பலி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
முன்னதாக சேலம் மறை மாவட்ட முன்னாள் ஆயா் சிங்கராயன் தலைமையில், சிறப்பு திருவிழா திருப்பலி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்னையின் அலங்கரிக்கப்பட்ட திருத்தோ் பவனியை அருட்தந்தை இருதயநாதன் தொடங்கி வைத்தாா். வாணவேடிக்கையுடன் ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்தத் தோ் பவனி கந்திகுப்பம், அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் வழியாகச் சென்று மீண்டும் நள்ளிரவில் ஆலய வளாகத்தை வந்தடைந்தது.
இந்த தோ் பவனியில் பா்கூா், கிருஷ்ணகிரி, எலத்தகிரி, புஷ்பகிரி, குரும்பா் தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான கிறிஸ்தவா்கள், பல்வேறு மதத்தினா் பங்கேற்று, தோ் மீது தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிட உப்பை வீசினா். இந்த தோ் பவனியையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நன்றி தினமணி.