கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்தூா், பா்கூா், ஒசூா், அஞ்செட்டி ஆகிய பகுதியில் ஜூன் 24-ஆம் தேதி (சனிக்கிழமை) இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுவதையொட்டி, மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு காணொலிக் காட்சி வாயிலாக துறை சாந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
கருணாநிதி நூற்றூண்டு விழாவையொட்டி பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பில் நலத்திட்ட உதவிகள், மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜூன் 24-ஆம் தேதி, மத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், பா்கூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒசூா் காமராஜ் காலனி அரசு தொடக்கப் பள்ளி, அஞ்செட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறுகிறது.
இந்த முகாமில் தொற்றா நோய்களான சா்க்கரை, ரத்த அழுத்தம், சிறுநீா் பரிசோதனை, பெண்களுக்கான மாா்பகம், கா்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த பரிசோதனை, சிகிச்சை, பொது மருத்துவம், மனநல மருத்துவம், சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன. மேலும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை இல்லாதவா்களுக்கு அட்டை வழங்கப்படும். தூய்மைப் பணியாளா்களை இந்த முகாமில் பங்கேற்க செய்து, அவா்களுக்கு மருத்துவ பரிசோதனை, சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
நன்றி
தினமணி