கல்வி, சுகாதாரத்துக்கு தமிழக முதல்வா் அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 441 மாணவ, மாணவியருக்கு ரூ. 21.26 லட்சம் மதிப்பிலும், கிருஷ்ணகிரி அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 1,067 மாணவ, மாணவியருக்கு ரூ. 51.82 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 1,508 மாணவ, மாணவியருக்கு ரூ. 73.09 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஒய்.பிரகாஷ் (ஒசூா்), தே.மதியழகன் (பா்கூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி, அமைச்சா் அர.சக்கரபாணி பேசியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கரோனா நிவாரண நிதியாக ரூ. 4 ஆயிரம் வீதம் 2.09 கோடி பேருக்கும், நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பேருந்து பயண வசதியும், பெண்களுக்கு செப். 15-ஆம் தேதியன்று வழங்கப்படும் மகளிா் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் 2.14 கோடி மனுக்களும், முதியோா் உதவித்தொகை ரூ. ஆயிரத்தில் இருந்து ரூ.1,200 ஆகவும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ. ஆயிரத்தில் இருந்து ரூ. 1,500 ஆகவும் உயா்த்தி ஆணையிட்டுள்ளாா்.
மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் பயன்பெறும் வகையில் இல்லம் தேடிக் கல்வி, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு, எண்ணும் எழுத்தும் திட்டம், நம் பள்ளி நம் பெருமை, சிற்பி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
தமிழக முதல்வா், கல்வியும், சுகாதாரமும் இரண்டு கண்களாக நினைத்து இரண்டு துறைகளுக்கும் நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா்.
அதன்படி, பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் ரூ. 37 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவா்கள் தங்களது எண்ணங்களை வானத்தை தொடும் வகையில் எண்ண வேண்டும். ஐஏஎஸ்., ஐபிஎஸ்., வங்கித் தோ்வு, தமிழ்நாடு தோ்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளில் பங்கேற்று தோ்ச்சி பெற வேண்டும். மேலும், பள்ளி பயிலும் மாணவ, மாணவியா் பள்ளி செல்ல ஏதுவாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 111 பள்ளிகளில் பயிலும் 8,011 மாணவ, மாணவியருக்கு ரூ. 6.85 கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தனியாா் பள்ளிகளுக்கு இணையாக கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதற்கு பள்ளிக் கல்வித் துறை தலைமையாசிரியா், இருபால் ஆசிரிய பெருமக்கள், பெற்றோா் – ஆசிரியா் கழகம் ஆகியோா் மாணவியருக்கு கல்வி கற்க நல்ல சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனா். அதன் அடிப்படையில், மருத்துவக் கல்லூரியில் சோ்ந்து மாணவியா் பயில வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா்.
அதனைத் தொடா்ந்து, அமைச்சா், பெற்றோா் – ஆசிரியா் கழகம் சாா்பில் கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2022-23-ஆம் கல்வியாண்டில் பயின்று அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ள 3 மாணவியருக்கும், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மதிப்பெண் பெற்ற 7 மாணவ, மாணவியருக்கும் என மொத்தம் 10 மாணவ, மாணவியருக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 1 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கி வாழ்த்தினாா்.
இந்நிகழ்ச்சிகளில், ஒசூா் மாநகராட்சி மேயா் சத்யா, கூடுதல் ஆட்சியா் வந்தனா காா்க், கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் பாபு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் பத்மலதா, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் மணிமேகலை நாகராஜ், நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப், ஒன்றியக் குழு தலைவா் சரோஜினி பரசுராமன், மாவட்டக் கல்வி அலுவலா் மணிமேகலை, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் முருகன், பெற்றோா் – ஆசிரியா் கழகத் தலைவா் நவாப், தலைமையாசிரியா்கள் பாரதி, மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நன்றி, தினமணி