கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திறமைகள், சிறந்த சாதனைகள் செய்த இளம் குழந்தைகள் பிராதன் மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தால் திறமையான குழந்தைகளை பாராட்டி, தன்னலமற்ற இளம் துணிச்சலான குழந்தைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்க இந்திய குடியரசு தலைவரால் பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது நாட்டில் விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் சமுதாயத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்திய, முன்மாதிரியாக இருக்கும், விதிவிலக்கான திறமைகள் மற்றும் சிறந்த சாதனைகள் செய்து இளம் குழந்தைகளுக்கு இந்திய குடியரசு தலைவரால் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 18 வயதுக்கு உட்பட்டவராகவும், இந்திய குடிமகனாகவும் மற்றும் இந்தியாவில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். இவ்விருதிற்கு தகுதியான குழந்தைகள் <https://awardss.gov.in> என்ற ஆன்லைன் போர்டல் வாயிலாக மட்டும் வருகிற 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.
![](https://www.hellokrishnagiri.in/wp-content/uploads/2023/08/WhatsApp-Image-2023-08-04-at-12.43.12-720x620.jpeg)