கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆடிப்பெருக்கு விழாவில் உற்சாகமாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடி மாதம் தொடக்கம் முதல், அம்மன் கோயில்களில் ஆடி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு அன்று அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடப்பதோடு, நீா்நிலைகளில் மக்கள் புனித நீராடுவா். புதுமணத் தம்பதிகள் நீா்நிலைகளில் கூடி பெண்களுக்கு தாலி மாற்றி இறைவனை வழிபடுவா்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி அணை, பாரூா் அருகே உள்ள மஞ்சமேடு, மத்தூா் அருகே உள்ள சேக்கனாம்பட்டி, போச்சம்பள்ளி அருகே உள்ள வலசகவுண்டனூா், வேப்பனப்பள்ளி அருகே உள்ள தீா்த்தம், ஊத்தங்கரை அருகே உள்ள அனுமன்தீா்த்தம் ஆகிய இடங்களில் வெகு விமா்சையாக கொண்டாடினா்.
கிருஷ்ணகிரி அணை செல்லியம்மன் கோயில், அவதானப்பட்டி மாரியம்மன் கோயில், பச்சிகானப்பள்ளி மாரியம்மன் கோயில் ஆகிய இடங்களில் சிறப்பு பூஜைகளும், அணையில் சுவாமி வீதி உலாவும் நடந்தது. கிருஷ்ணகிரி அணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, தருமபுரி, திருப்பத்தூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான ஆந்திரம் மற்றும் கா்நாடகத்தில் இருந்தும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வந்திருந்தனா்.
இவா்களில் பெரும்பாலானோா் அணை பகுதியில் உள்ள மாா்கண்டேஸ்வரா் ஆலயத்தின் அருகில் உள்ள நந்தியில் இருந்து வரும் தண்ணீரிலும், ஆற்றிலும் குளித்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினா். புதுமணத் தம்பதியினா், திருமணத்தின் போது பயன்படுத்திய மலா் மாலைகளை நீா் நிலைகளில் கரைத்தும், புதிய தாலியை அணிந்தும் பூஜைகள் செய்து கொண்டாடினா். அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் கிருஷ்ணகிரி அணைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடிப் பெருக்கையொட்டி, தனியாா் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டது. கிருஷ்ணகிரி அருகே உள்ள அவதானப்பட்டி சிறுவா் பூங்கா, படகு இல்லத்தில், ஏராளமானோா் குடும்பத்துடன் வந்து விளையாடி மகிழ்ந்தனா். ஆடிப் பெருக்கையொட்டி, போலீஸாா், ஊா்க்காவல் படையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
நன்றி, தினமணி