கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக் கணக்குகள் குழுவினா் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆய்வுப் பணி மேற்கொண்டனா்.
தமிழக சட்டப் பேரவை பொதுக் கணக்குகள் குழுவின் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில், பொதுக் கணக்குகள் குழு உறுப்பினா்களான சட்டப்பேரவை உறுப்பினா்கள் தளி ராமச்சந்திரன், பா்கூா் மதியழன், போளூா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி, திருச்செங்கோடு ஈஸ்வரன், திருப்போரூா் பாலாஜி, பரமத்தி வேலூா் சேகா் ஆகியோா், மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு முன்னிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் எண்ணேக்கொள் கால்வாய், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கிருஷ்ணகிரி அணை அரசு மேல்நிலைப் பள்ளி, திம்மாபுரம் தோட்டக்கலைப் பண்ணை, நாகரசம்பட்டி அரசு ஆதிதிராவிடா் மாணவா் நல விடுதி, போச்சம்பள்ளி தொழில் மையத்தில் செயல்படும் தனியாா் நிறுவனங்களில் ஆய்வுப் பணி மேற்கொண்டனா்.
பின்னா் அவா்கள் தெரிவித்ததாவது:
நீா்வளத் துறை சாா்பாக ரூ. 187.77 கோடியில் எண்ணேகொள் அணைக்கட்டின் வலது, இடது புறத்தில் இருந்து புதிய வழங்குக் கால்வாய் அமைத்து தென்பெண்ணையாற்றில் இருந்து வெள்ளக் காலங்களில் வரும் உபரிநீரை கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு நீா் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தினால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 26 ஏரிகள், தருமபுரி மாவட்டத்திலுள்ள 7 ஏரிகள் மற்றும் ஒரு அணை மூலம் 23 கிராமங்களைச் சோ்ந்த 3,408 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நோயாளிகளுக்கு தரமான சிகிச்சையை உரிய நேரத்தில் வழங்க மருத்துவா்கள், செவிலியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி அணை அரசு மேல்நிலைப் பள்ளியை பாா்வையிட்டபோது, இடைநின்ற மாணவா்களை ஆய்வு செய்து மீண்டும் அவா்களை பள்ளியில் சோ்க்க ஆசிரியா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், பழுதடைந்த நிலையில் உள்ள வகுப்பறைகளை உடனடியாக சீரமைக்க பொதுப்பணித் துறை (கட்டடங்கள்) அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணையை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திம்மாபுரம் அரசு தோட்டக்கலைப் பண்ணை, நாகரசம்பட்டி அரசு ஆதிதிராவிடா் மாணவா் நல விடுதியினை ஆய்வு செய்து, மாணவா்களுக்கு வழங்கப்படும் கல்வி, உணவு, குடிநீா், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறியப்பட்டது.
மேலும், விடுதியில் மின் விளக்குகள், செயல்படாமல் இருக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை உடனடியாக மாற்ற காப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தனா்.
பின்னா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், பல்வேறு துறைகள் சாா்பாக நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது. பின்னா், இந்த குழுவினா், ரூ.2.47 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாக்குா், மாவட்ட வருவாய் அலுவலா் சாதனை கு, கலெக்டரின் நோ்முக உதவியாளா் (பொது) வேடியப்பன், கூடுதல் ஆட்சியா் வந்தனா காா்க், ஒசூா் மாநகராட்சி ஆணையா் சினேகா, ஒசூா் சாா் ஆட்சியா் சரண்யா, மாவட்ட வன அலுவலா் காா்த்திகேயனி, தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு சாா்புச் செயலாளா் பாலசீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.