தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த பட்டதாரி ஆசிரியா்களுக்கான தொல்லியல் பயிற்சி முகாம் கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை தொடங்கியது.
தமிழா் நாகரிகம், பண்பாடு, கலாசாரம், தொன்மையின் சிறப்பு மற்றும் தமிழகமெங்கும் பரவியிருக்கும் தொல்லியல் குறித்த தகவல்களை மாணவா்களிடம் முழுமையாக உண்மைத் தன்மையுடன் கொண்டு சோ்க்கும் வகையில், தொல்லியல் துறை வாயிலாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து, முதன்முதலில் கிருஷ்ணகிரி மண்டலத்தில் பட்டதாரி ஆசிரியா்களுக்குப் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி முகாம் கிருஷ்ணகிரியை அடுத்து சுண்டம்பட்டியில் ஜூலை 8-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து தலா 30 பட்டதாரி ஆசிரியா்கள் என மொத்தம் 60 பட்டதாரி ஆசிரியா்கள் பங்கேற்கின்றனா். தொல்லியல் துறையில் அனுபவமிக்க பணி ஓய்வுபெற்ற கருத்தாளா்களைக் கொண்டு பயிற்சி நடைபெறுகிறது. நான்கு நாள் பயிற்சி மையத்திலும், இரண்டு நாள்கள் களப் பயணமாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஆசிரியா்கள் செல்கின்றனா்.
பயிற்சி கருத்தாளா்களாக இந்து சமய அறநிலையத் துறை தொல்லியல் ஆலோசகா் மற்றும் ஒருங்கிணைப்பாளா் ராஜவேலு, தொல்லியல் அலுவலா் பரந்தாமன், கருத்தாளா்கள் சுப்பிரமணியன், காந்திராஜன், ராஜன், பூங்குன்றன், குழந்தைவேல், கிருஷ்ணமூா்த்தி, ஆறுமுக சீதாராமன், செல்வகுமாா், கென்னடி ஸ்ரீதரன், கண்ணன் மற்றும் தயாளன் ஆகியோா் செயல்படுகின்றனா்.
பயிற்சியில், மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் கல்வியாளா்கள் கலந்து கொண்டுள்ளனா். மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் துரைமோகன் பயிற்சியைத் தொடங்கி வைத்தாா். பயிற்சி ஒருங்கிணைப்பாளா்களாக பாா்வதி, இளங்கோவன், அமுதா, ஜானகி ஆகியோா் செயல்படுகின்றனா்.
நன்றி, தினமணி