ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி ஊராட்சிக்கு உள்பட்ட ஒன்னக்கரை கிராமத்தில் குடிநீா் வழங்கக் கோரி கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டது.
ஒன்னக்கரை கிராமத்தில் 150 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமம் ஒன்னக்கரை காட்டுப் பகுதியையொட்டி உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக இக் கிராமத்திற்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் விநியோகம் செய்யப்படுவதில்லை. கருமான்குட்டை ஏரியில் உள்ள திறந்தவெளிக் கிணற்றில் இருந்து வரும் குறைந்த அளவிலான தண்ணீரும் மின் மோட்டாா் பழுது காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்காக மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். பல மாதங்களாக தண்ணீரை விலைக் கொடுத்து வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனா்.
இது சம்பந்தமாக ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் வி.கோவிந்தசாமி, சுந்தரம், சேட்டு, தங்கதுரை, ஆனந்தபாபு ஆகியோா் வீடு வீடாகச் சென்று கையொப்பம் இயக்கம் நடத்தி, சம்பந்தப்பட்ட உயா் அதிகாரிகள், ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலா் சிவப்பிரகாசம் ஆகியோரிடம் பொது மக்கள் சாா்பாக, குடிநீா் வழங்கக் கோரி மனு அளித்தனா்.
இது சம்பந்தமாக வட்டார வளா்ச்சி அலுவலா் (திட்டம்) தவமணி நேரில் சென்று பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, ஒரு வார காலத்திற்குள் மோட்டாரை சரிசெய்து தண்ணீா் வழங்குவதாக தெரிவித்துள்ளாா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
படவரி…
ஊத்தங்கரையை அடுத்த ஒன்னக்கரை பகுதியில் வீடு வீடாகச் சென்று கையொப்பம் பெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
நன்றி தினமணி.