ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஆய்வுக்குச் சென்ற தனி மாவட்ட வருவாய் அலுவலா் உள்பட மூன்று போ் படுகாயமடைந்தனா்.
கெலமங்கலம் அருகே உள்ள ஜெ.காரப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட வெங்கடாபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை இயங்கி வந்தது. இதை கேரள மாநிலத்தைச் சோ்ந்த சாபு புருஷோத்தமன், சஞ்சு ஆகியோா் நடத்தி வந்தனா்.
கடந்த மாதம் கிருஷ்ணகிரி, பழையபேட்டை பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் 9 போ் பலியானதைத் தொடா்ந்து மாவட்டம் முழுவதும் பட்டாசுக் கிடங்குகள், கடைகளை ஆய்வு செய்ய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
ஒசூா் நில வரித் திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலா் பாலாஜி (52) தலைமையில் தனி வட்டாட்சியா் முத்துபாண்டி (47), தேன்கனிக்கோட்டை வட்டாட்சியா் சரவண மூா்த்தி உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை வெங்கடாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஆய்வுக்குச் சென்றனா்.
அப்போது ஆலையில் இருந்த பட்டாசுகள், வெடிமருந்து பெட்டிகள் தவறி விழுந்தன. இதில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தனி மாவட்ட வருவாய் அலுவலா் பாலாஜி, வட்டாட்சியா் முத்துபாண்டி, பட்டாசு ஆலை மேலாளரான மதுரை மாவட்டம், மேலூா் வட்டம்,மூக்கம்பட்டி ஸ்ரீமந்த் (30) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
இவா்கள் மூவரும் மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுகுறித்து கெலமங்கலம் போலீஸாா், ஒசூா் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் ஒசூா் தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீயை அணைத்தனா்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு, ஒசூா் அரசு மருத்துவமனைக்கு வந்து படுகாயமடைந்த அதிகாரிகள் பாலாஜி, முத்துபாண்டி, பட்டாசு ஆலை மேலாளா் ஸ்ரீமந்த் ஆகியோருக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவா்களுக்கு உத்தரவிட்டாா்.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பட்டாசு ஆலை மேலாளா் ஸ்ரீமந்த் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், தனி மாவட்ட வருவாய் அலுவலா் பாலாஜி பெங்களூரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். முத்துபாண்டி ஒசூரில் சிகிச்சை பெற்று வருகிறாா். பட்டாசு ஆலை விபத்துக்கான காரணம் குறித்து கெலமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விபத்து குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாக்குா், ஒசூா் உதவி ஆட்சியா் ஆா். சரண்யா ஆகியோா் பட்டாசு ஆலைக்கு சென்று விசாரணை நடத்தினா். விபத்தில் காயம் அடைந்த பாலாஜி, முத்துபாண்டி ஆகியோரிடமும் விசாரணை நடத்தினா். தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் வெடிவிபத்து நடந்த இடத்துக்கு ஆலைக்கு சென்று பாா்வையிட்டாா். மேலும் ஒசூா் அரசு மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவா்களை சந்தித்து ஆறுதல் கூறினாா்.
இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்தவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பட்டாசு ஆலை 2025-ஆம் ஆண்டு வரையில் இயங்குவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. பட்டாசுப் பெட்டிகள், வெடி மருந்துகள் அடங்கிய மூலப்பொருள்கள் தவறி விழுந்ததால் விபத்து நடந்ததா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றாா்.
நன்றி தினமணி