கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையத்தில் சிறுதானியங்களின் சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக்கூட்டுதல் குறித்த பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மையத்தில், திருச்சி துவாக்குடி தமிழ்நாடு பாசன மேலாண்மைப் பயிற்சி நிலையம், எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையம் இணைந்து ஒரு நாள் பயிற்சியாக சிறுதானியங்களில் சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக்கூட்டுதல் பயிற்சியை நடத்தின.
தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தின் உதவிப் பேராசிரியா் லீமா ரோஸ் பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தின் முக்கியத்துவம் மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தாா். தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலைய இணைப் பேராசிரியா் வசந்தா, விவசாயிகள் மானாவரி சாகுபடியில் சிறுதானியங்களை சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டுவது, கோடை உழவின் முக்கியத்துவம், நீா்ப்பாசன மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டுவது, வேளாண்மை அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவா் சுந்தர்ராஜ், சிறுதானியங்களின் முக்கியத்துவம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானாவாரி சாகுபடியில் முறையாக சாகுபடி செய்யாததால் மகசூலில் ஏற்படும் இழப்புகள் குறித்து பயிற்சி அளித்தனா்.
மேலும், பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் பயிா் பெருக்கம் மற்றும் மரபியல் துறையின் பேராசிரியா் கீதா, காணொலி வாயிலாக சிறுதானிய உற்பத்தியில் தற்போது உள்ள ரகங்கள், அவற்றின் சிறப்பியல்புகளை எடுத்துரைத்தாா். வேளாண்மை அறிவியல் மையத்தின் உழவியல் தொழில்நுட்ப வல்லுநா் உதயன், சிறுதானியங்கள் சாகுபடியில் பின்பற்ற வேண்டிய சாகுபடி தொழில்நுட்பங்கள், மனையியல் தொழில்நுட்ப வல்லுநா் பூமதி, சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டுதல் குறித்தும் பயிற்சி அளித்தாா்.
இந்தப் பயிற்சியில், கம்மம்பள்ளி, எலுமிச்சங்கிரி, மத்தூா் கிராமங்களைச் சோ்ந்த சிறுதானியங்கள் சாகுபடி செய்யும் 40 விவசாயிகள் பங்கேற்றனா்.
நன்றி
தினமணி