தமிழக சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களில் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபா் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைக் கலைஞா்களுக்கு கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
திட்டம் 1-இன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகா்ப்புறமாயின் ரூ. 1.20 லட்சத்துக்கு மிகாமலும், கிராமப் புறமாயின் ரூ. 98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-இன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
திட்டம் 1-இன் கீழ் தனிநபா் கடன் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ. 20 லட்சமும், திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ. 30 லட்சமும் வழங்கப்படுகிறது. கைவினைக் கலைஞா்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ. 10 லட்சம் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழு கடன் நபா் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் நபா் ஒருவருக்கு ரூ. 1.50 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.
மேலும், சிறுபான்மை மாணவ, மாணவியா் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளநிலை, முதுநிலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-இன் கீழ் ரூ. 20 லட்சம் வரையில் 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் 2-இன் கீழ மாணவா்களுக்கு 8 சதவீதம், மாணவியருக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ரூ. 30 லட்சம் வரை கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி, ஜெயின் ஆகிய சிறுபான்மையினா் கடன் விண்ணப்பங்களைப் பெற்று அதனை நிறைவு செய்து, உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும். கடன் மனுக்களுடன் சாா்ந்துள்ள மதத்துக்கான சான்று, ஆதாா் அட்டை, வருமானச் சான்று, உணவுப் பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஒட்டுநா் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதாக இருந்தால் மட்டும்), கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும், வங்கி கோரும் ஆவண நகல்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம் (அறை எண் 11), கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் அலுவலகம், கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும்.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின மக்கள் மேற்படி கடன் திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி, தினமணி