தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளிலேயே மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் நுண்துறை தண்டுவட சிகிச்சை செய்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சாதனை படைத்து வருகிறது.
இது குறித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.பூவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி அரசு கல்லூரி மருத்துவமனையில் எலும்பியல் பிரிவில் பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறப்பு சிகிச்சை பிரிவின் கீழ் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, குழந்தைகள் குறைபாடு அறுவை சிகிச்சை, விளையாட்டு காயங்களுக்கான நுண்துளை அறுவை சிகிச்சை என பல்வேறுபட்ட சிறப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, அந்த வகையில் தண்டுவட சிறப்பு பிரிவில் இடுப்பு, கை, கால் வலிகளுக்கு நுண் துளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளிலேயே முதல் கல்லூரியாக கடந்த 2019ம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய தண்டுவட நுண்துளை அறுவை சிகிச்சை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலமாக கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுப்புற மாவட்டத்தின் நகர்புற மற்றும் கிராம மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றுள்ளனர்.
முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், ஜப்பான் சர்வதேச நிறுவனத்தின் ஜே.ஐ.சி.ஏ., உதவியுடன் இந்த சிறப்பு அறுவை சிகிச்சை எலும்பில் சிகிச்சை பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்றும் ஓசூர் பகுதியை சேர்ந்த கலைச்செல்வி என்பவருக்கு இடுப்பு வலிக்காக, நுண்துளை தண்டுவட சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக வீட்டிற்கு அனுப்பபட்டார். சிறந்த முறையில் அறுவை சிகிச்சைகளை டாக்டர் தனசேகரன் தலைமையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சந்திரசேகரன், துறை தலைவர் டாக்டர் பிரசன்ன வெங்கடேசன் ஆகியோர் சிறப்பாக செய்கின்றனர்.
இந்த நுண்துளை அறுவை சிகிச்சையின் மூலம், தீராத இடுப்பு வலி, கை, கால் வலிகளுக்கு தழும்பில்லாத, வலி இல்லாத முழு மயக்கமில்லாமல் வெறும் மறத்து போதும். மருந்து செலுத்தி, ரத்த சேதாரம் இல்லாமல் ஒரு நாளிலேயே வீட்டிற்குச் செல்லும் தன்மையுடன் கூடிய ‘டே கேர்’ அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிகிச்சை பெற்றவர்கள், பளு தூக்குவது முதல் அன்றாட தொழில் நடைமுறையில் எந்த சிரமமும் இல்லாமல் வாழ முடியும். எனவே இந்த வாய்ப்பின் மூலம் மூட்டு, இடுப்பு வலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பயனடையலாம்.
இவ்வாறு அவர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.