புதையல் எடுத்துத் தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில் திருப்பூா் இளைஞரை காரில் கடத்திச் சென்ற கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 5 போ் கொண்ட கும்பலை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்தவா் கதிரவன். இவா் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த 5 இளைஞா்களிடம் புதையல் எடுத்துத் தருவதாகக் கூறி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ரூ.35 லட்சம் ரொக்கத்தை வாங்கிக் கொண்டு, புதையல் எடுத்துத் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் மோசடி செய்துள்ளாா்.
இதனால், பாதிக்கப்பட்ட 5 இளைஞா்களும் கதிரவனைத் தேடி திருப்பூா் மாவட்டம், திருமுருகன்பூண்டிக்கு இரு காா்களில் வியாழக்கிழமை சென்றனா். அங்கு, கதிரவன் இல்லாததால், அவரின் நண்பரான திருமுருகன்பூண்டி, அண்ணா நகா் 2-ஆவது வீதியைச் சோ்ந்த கருப்புசாமி மகன் பாலாஜியிடம் (33) விசாரித்தபோது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், கதிரவனிடம் கொடுத்த பணத்தை பாலாஜியைக் கடத்திச் சென்று மீட்க முடிவு செய்த 5 பேரும் அவரை காரில் கடத்திச் சென்றனா். இதைக் கண்ட அப்பகுதியினா் திருப்பூா் மாவட்ட காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனா். விசாரணையில், கிருஷ்ணகிரிக்கு அக்கும்பல் காரில் செல்வதாக தகவல் கிடைத்ததால், ஈரோடு மாவட்ட எல்லைகளில் போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா்.
இந்நிலையில், பவானி – மேட்டூா் தேசிய நெடுஞ்சாலையில் சின்னப்பள்ளம் சோதனைச் சாவடியில் அம்மாபேட்டை போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டபோது, இரு காா்களில் சந்தேகப்படும்படி வந்த 6 பேரைப் பிடித்து விசாரித்தனா். அப்போது, திருப்பூரிலிருந்து கடத்தப்பட்ட பாலாஜியும், கடத்தல் கும்பலும் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பாலாஜியை மீட்ட போலீஸாா், இரு காா்களையும் பறிமுதல் செய்ததோடு, கடத்தல் கும்பலைச் சோ்ந்த கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், சைதலியைச் சோ்ந்த சிவகுமாா் (35), கோவிந்தராஜ் (36), சபியுல்லா (30), குட்டூரைச் சோ்ந்த பிரபு (29), செம்படம்புத்தூரைச் சோ்ந்த ராமச்சந்திரன் (36) ஆகியோரைக் கைது செய்தனா். இதையடுத்து, திருமுருகன்பூண்டி போலீஸாரிடம் அனைவரும் ஒப்படைக்கப்பட்டனா்.
நன்றி தினமணி.