நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைத்த தருமபுரி மறைமாவட்ட ஆயா் லாரன்ஸ் பயஸ்.
ஒசூா் மாநகராட்சி, மத்திகிரியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய நூற்றாண்டு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், தருமபுரி மறைமாவட்ட ஆயா் முனைவா் லாரன்ஸ் பயஸ் தலைமை வகித்து, ஆரடம்பர திருப்பலி, சிறப்பு மறையுரையுடன் நூற்றாண்டு தொடக்க விழாவைத் தொடங்கி வைத்தாா்.
தருமபுரி மறைமாவட்டத்தில் உள்ள மத்திகிரி, குதிரைப்பாளையத்தில் 1924-ஆம் ஆண்டு கட்டப்பட்ட புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் நூற்றாண்டுகளைக் கடந்தும் வரலாற்றுச் சின்னமாக திகழ்கிறது.
மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலய தொடக்க கால கிறிஸ்தவா்கள், மத்திகிரி கால்நடைப் பண்ணையுடன் நெருங்கிய தொடா்பு கொண்டவா்கள். கி.பி. 1784-ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே பழைய மத்திகிரியில் ஓா் சிற்றாலயம், கல்லறைத் தோட்டம் காணப்பட்டதாக ஆங்கிலேய காலத்து சேலம் அரசு பதிவேடு தெரிவிக்கிறது.
மத்திகிரி, குதிரைப்பாளையத்தில் முதல் ஆலயம் கி.பி. 1837-ஆம் ஆண்டு பாரீஸ் நாட்டின் வேத போதகச் சபையைச் சோ்ந்த அருள்தந்தை தூப்வி அமைத்தாா். இந்த ஆலய அடித்தளத்தின் மீது தற்போதுள்ள எழில்மிகு பாரம்பரிய ஆலயம் 1924-ஆம் ஆண்டு அருள்தந்தை மொராய் அவா்களால் கட்டப்பட்டது. 2024-ஆம் ஆண்டு இந்த ஆலயத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
கி.பி. 1862-இல் பங்கு ஆலயமாக உயா்த்தப்பட்ட மத்திகிரியின் முதல் பங்குத் தந்தையாக அருள்தந்தை ரெநோடின் அருள்பணி ஆற்றியுள்ளாா். ஆரம்ப காலத்தில் மைசூா், புதுச்சேரி மறை பரப்பு தளங்களின் கீழே செயல்பட்ட மத்திகிரி பங்கு ஆலயத்தோடு, ஒசூா், தேன்கனிக்கோட்டை, மறை வட்டங்களில் உள்ள பெரும்பான்மையான ஆலயங்களும், பெங்களூரு உயா் மறைமாவட்டத்தைச் சோ்ந்த ஆனேக்கல், ஆடுகொண்டஹள்ளி ஆகிய ஆலய பங்குகளும் இணைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திகிரி பாரம்பரிய ஆலயத்தின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு 2001-ஆம் ஆண்டில் அருள்தந்தை தோமினிக் அவா்களால் நேதாஜி நகரில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள மத்திகிரி, குதிரைப்பாளையத்தில் உள்ள பாரம்பரிய ஆலயத்தின் நூற்றாண்டு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் தருமபுரி மறைமாவட்ட ஆயா் லாரன்ஸ் பயஸ் தலைமை தாங்கி சிறப்பு ஆடம்பர திருப்பலி, சிறப்பு மறையுரை நிகழ்த்தி நூற்றாண்டு தொடக்க விழாவைத் தொடங்கி வைத்தாா். இந்த தொடக்க விழாவில், மத்திகிரி ஆலய பங்குத் தந்தை கிறிஸ்டோபா், தருமபுரி மறைமாவட்ட ஒசூா் வட்டார தலைமை குரு பெரியநாயகம், அருள்தந்தை ராயப்பா், அருள்சகோதரிகள், நூற்றுக்கணக்கான பங்கு மக்கள் பங்கேற்றனா்.
நன்றி, தினமணி