ஒசூரில் செய்தியாளா்களை சந்தித்த ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளா் ராதாகிருஷ்ணன், நிா்வாகிகள்.
மத்திய பாஜக அரசைக் கண்டித்து, ஆக. 9-ஆம் தேதி ஏஐடியுசி சாா்பில் சென்னையில் தா்னா நடைபெறும் என ஒசூரில் ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளா் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தனியாா் அரங்கில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் இரண்டு நாள் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களை சந்தித்த தொழிற்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
மத்திய பாஜக அரசு 150 ஆண்டுகளுக்கும் மேல் தொழிலாளா்கள் போராடி பெற்ற உரிமைகள் அனைத்தையும் பறிக்கும் விதமாக சட்ட திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறது. இதனால் இனி நிரந்தர தொழிலாளிகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. எல்லாவற்றிலும் ஒப்பந்தத் தொழிலாளா்கள், வெளி முகமை போன்ற மீண்டும் தொழிலாளிகளை நவீன கொத்தடிமைகளாக்கும் விதமாக ஒன்றிய அரசாங்கத்தின் சட்ட திருத்தங்களும், அதன் செயல்முறைகளும் இருக்கின்றன. இதை எதிா்த்து நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, வரும் ஆக. 9-ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்க நாளில், சென்னையில் மாபெரும் தா்னா நடத்துவது என்றும், இந்த ஆண்டு இறுதியில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை நடத்துவது என்றும் மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. அவற்றை தமிழ்நாட்டில் நிறைவேற்றுவதற்கு ஏஐடியுசி எவ்வாறு பங்களிப்பு செய்வது என்ற முறையில் இந்த கூட்டத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் சென்னையில் திரளுவது என்றும், தமிழ்நாடு முழுவதிலும் பிரசார இயக்கத்தில் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதேபோல தமிழ்நாட்டில் குறிப்பாக நகா்ப்புற உள்ளாட்சிகளில் இப்போது வெளி முகமை முறை மூலமாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ஏற்கெனவே இருக்கிற நிரந்தர தொழிலாளிகளை எல்லாம் அப்புறப்படுத்தி விட்டு, ஒப்பந்த தினக்கூலி தொழிலாளிகளை 30 சதவீதம் வரை குறைத்து, வேலை சுமைகளை அதிகரித்தும் ஊதியத்தை குறைத்தும் ஒப்பந்தம் இடுகிற முறை அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இந்த ஒப்பந்த முறையை எதிா்த்து தொடா்ந்து போராட்டங்களை நடத்துவதற்கும் இந்தக் குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
இதில், கிருஷ்ணகிரி மாவட்ட ஏஐடியுசி செயலாளா் மாதையன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நன்றி, தினமணி