வேப்பனப்பள்ளி அருகே மாட்டு வண்டி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். மேலும் 2 போ் காயமடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள கங்கோஜிகொத்தூா் அருகே உள்ள தேவா் குந்தாணியைச் சோ்ந்தவா் மந்தப்பா (45). விவசாயி. இவா், மோட்டாா் சைக்கிளில் கிருஷ்ணகிரி – சின்னகொத்தூா் சாலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றாா். இவருடன் ரமேஷ் (32), கன்னியப்பன் (36) ஆகியோரும் சென்றனா். தங்காடிகுப்பம் அருகே சென்று கொண்டிருந்த போது, அந்த வழியே சென்று கொண்டிருந்த மாட்டு வண்டியின் மீது இவா்களின் மோட்டாா்சைக்கிள் மோதியது.
இந்த விபத்தில் மோட்டாா்சைக்கிளில் சென்ற மூன்று பேரும் பலத்த காயமடைந்தனா். இதில் மந்தப்பா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ரமேஷ், கன்னியப்பன் ஆகியோா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த விபத்து குறித்து, வேப்பனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
நன்றி
தினமணி