மூளையில் ஏற்பட்ட ரத்தக்குழாய் அடைப்பை நீக்கி பக்கவாத நோயில் இருந்து முதியவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பூவதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பரிவில், கடந்த 29 காலை மாதையன், 63, என்பவர் அனுமதிக்கப்பட்டார். அவரது இடது கை, கால் மற்றும் முகம் 3 மணி நேரமாக செயல் இழந்து இருந்தது. அவருக்கு உடனே தலைக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டு, மூளையில் உள்ள ரத்தக் குழாய் அடைப்பை கண்டறிந்து ரத்தக்குழாய் அடைப்பை நீக்குவதற்கான ALTEPLASE 50 MG என்ற விலை உயர்ந்த மருந்து தமிழக அரசால் வழங்கப்பட்டு அவருக்கு செலுத்தப்பட்டது. இந்த சிகிச்சையின் பலனாக ரத்தக்குழாய் அடைப்பு நீக்கி இடது கை, கால் பலம் பெற்று முழுவதுமாக இயல்பு நிலைக்கு திருப்பி உள்ளார்.
பக்கவாதம் ஏற்பட்டவர் உடனே நான்கரை மணி நேரத்திற்குள் வந்தால் உடனடியாக சிடி ஸ்கேன் எடுத்து இம்மருந்தை செலுத்தினால் பலருக்கு நிரந்தர ஊனம் ஏற்படாமல் பெருமளவு தடுக்க முடியும். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர் சந்திரசேகர், பொது மருத்துவத் துறை தலைவர் இளங்கோ, நரம்பியல் துறை விஷ்ணுராஜ் ஆகியோர், விரைந்து செயல்பட்ட அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் டாக்டர் விஜய், கோபிநாத், மேற்படிப்பு மருத்துவர் டாக்டர் அரவிந்தன், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரை பாராட்டினர். இத்தகைய உயர்தர உயிர் காக்கும் மருந்து தனியார் மருத்துவமனையில் செலுத்துவற்கு சேலம், பெங்களூரு செல்ல வேண்டும். தனியார் மருத்துவமனையில் இந்த மருந்துக்கு 35 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இது நமது அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆகவே பொதுமக்கள், பக்க வாதத்தின் அறிகுறிகள் தென்பட்டால் உடனே நமது அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லுாரிக்கு வந்து இந்த உயிர் காக்கும் பக்கவாத சிகிச்சையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
–––––––
![](https://www.hellokrishnagiri.in/wp-content/uploads/2023/09/WhatsApp-Image-2023-08-04-at-12.43.12-720x620.jpeg)